கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

12249690_758713504272106_7181539166657206921_nஅண்மைகாலமாக இணையத் தளங்களில் அதிகமாக திப்பு சுல்தான் மோடியின் பாஜக பொய்யர்கலளால் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். இந்திய விடுதலைப் போரை திப்பு தொடங்கி வைக்கவில்லை, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறார் என்று தொடர்ந்து இந்து பயங்கரவாதிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள். அதற்கு சான்றாக அவர்கள் வைக்கும் மிக முக்கியமான ஒரு பொய்.. லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு படத்தை எடுத்து அது திப்புவின் உண்மைபடம் என்றும், அதில் திப்பு பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருக்கிறான் பாருங்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்கள் காட்டும் படத்தை கீழே கொடுத்துள்ளேன். படத்தில் உள்ளவர் பார்ப்பதற்கு ரவுடி போலத்தான் இருக்கிறார், ஏனென்றால் அவர் கருப்பாக இருக்கிறார் ( கருப்பு வெள்ளை படத்தில் கலராக எப்படி இருப்பார் என்று நீங்கள் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது) பக்கத்தில் கலராக இருக்கும் படம் பொய்யாக வரையப்பட்ட திப்புவின் ஓவியப் படம் என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை. இந்த பித்தலாட்டக்காரர்களுக்கு நான் முன்வைக்கும் கேள்விகள் இவை.. நெஞ்சில் துணிவிருந்தால் பதில் சொல்லட்டும்..

1. வெள்ளைக்காரன் மீயூசியத்தில் இருக்கும் இந்த கருப்பு வெள்ளைப் படம் உண்மையான படம் என்பதற்கு என்ன உத்திரவாதம்.

2. திப்பு பிறந்தது 20.11.1750 / பதவி ஏற்றது 29.12.1782. / இறந்தது 4.5.1799

3. உலகில் கேமரா கண்டுபிடிக்கப்பட்டு பாதி புகைப்படம் போல எடுக்கப்பட்டது நைஸ்போர் நிப்சே என்பவரால் 1816 ஆம் ஆண்டு .

4. கிடைத்திருக்கும் உலகின் முதல் புகைப்படம் 1826க்கும் 1827க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

5. இந்தியாவில் கேமரா அறிமுகம் ஆன ஆண்டு 1840.. பிரிட்டிஷ் பயணிகளால் அது அறிமுகம் ஆனது. வில்லியம் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரால் நிறைய படங்கள் முதன் முதலில் எடுக்கப்பட்டது. அதுவும் அவர் கோயில்களைத்தான் எடுத்தார்.

6. 1799 ஆம் ஆண்டு நடந்த நான்காம் மைசூர் போரில் 50,000 பேர் கொண்ட வெள்ளை ராணுவ படையை எதிர்த்து வெறும் 30,000 ம் பேர்களுடன் தீரத்தோடு எதிர்த்து போரிட்ட திப்பு, போருக்காக திட்டமிட ஸ்ரீரங்க பட்டினம் கோட்டைக்கு அருகில் தங்கி இருக்கும் போது அவரது நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் பூரணய்யா என்ற பார்ப்பனரால் காட்டிக்கொடுக்கப்பட, ஒரு சாதாரண வெள்ளை சிப்பாய் அவரை துப்பாகியால் சுட்டு கொன்றான். துரோகத்தினால் திப்பு கொல்லப்பட்ட நாள் 4.5.1799

7. திப்பு இறந்து 61 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த கேமரா திப்புவின் ஆவியை படம் எடுத்ததா.

8. திப்பு ரவுடி, கொலைகாரன் என்றால் நமது மோடி மகாத்மாவா..குஜராத்தில் அவர் செய்தது சத்யாகிரகமா..?

12208547_758713510938772_7696397095368253012_n9.அப்படியானால் இந்திய சுதந்திரத்தை வாங்கித் தந்தது நமது மகாத்மா மோடியா..

10. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள் இந்து பயங்கரவாதிகளின் புளுகுக்கு அற்ப ஆயுள் கிடையாது என்பது உண்மைதான். ஆனால் இந்த பொழப்பு எதற்காக.

சன்னா

Advertisements

விரைவில் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி…

விரைவில் பாகிஸ்தான் நாட்டில் ராணுவப் புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதன்முறையாக வாஜ்பாய் பிரதமரானபோது கார்கில் போர் வந்தது. வெற்று பாறைகள் நிறைந்த சியாச்சின் மலை முகடுகளை பாதுகாக்க என்ற பாசாங்கில் நடத்தப்பட்ட ஒத்திகைப் போர் அது. அந்த போர் முடிந்த உடனே ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஷ் முசாரஃப் அதிபராக ஆட்சியைப் பிடித்தார். அதைக் காரணம் காட்டி இந்தியாவில் அதிபர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றபாஜக-வின் கோரிக்கை வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டம் மாற்றி எழுத நீதியரசர் வெங்கடாசலய்ய தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களால் அதிபர் ஆட்சி என்ற பாஜகவின் கனவு தகர்ந்துப் போனது. Continue reading

இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்!

Thamizhmann Wrapper - October 2013
– கௌதம சன்னா
        இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் அமைந்திருக் கிறதோ அங்கெல்லாம் இந்து பயங்கரவாதத்தின் நச்சு வேர்கள் பரவியுள்ள மாநிலம். ஆட்சிகள் மாறினாலும் பயங்கரவாதத்தின் காட்சிகள் மாறாத ஒரு மாநிலமாக அது தொடர்கிறது என்பதற்கு இப்போது முசாபர் நகரம் ஒரு சாட்சி.
        முசாபர் நகரத்தில் அண்மையில் நடந்த கலவரம் பற்றிச் செய்திகளை வெளியிடாத ஊடகங்களே இல்லை எனும் அளவிற்கு பயங்கரவாதத்தின் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடியது. ஆனால் ஊடகங்களில் அந்தக் கலவர நிகழ்வைப் பற்றிக் காட்டினாலும் யார் யாருக்கு இடையில் நடை பெற்றது என்பது குழப்பமாகவே பல நாட்கள் தொடர்ந்தது. எனவே சந்தேகம் அதிகமானது.
        முசாபர் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவிய கலவரத்தினால் அறுபதுக்கும் மேற் பட்டவர்கள் கொல்லப்பட்டதாக வும், கலவரத்திற்கு வித்திட்டவர் களாக இசுலாமியர்கள் குற்றவாளி களாக முன்னிறுத்தப்பட்டதும் நிலைமை படுமோசமாக மாறுவதை உணர்த்தியது. இப்படிச் சொல்லப் பட்டதும் முசாபர் நகர் கலவரத்தை, குசராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்புப் படுகொலைக்கு இணை யானதாக சிலர் ஒப்பிட்டுப் பேசிய உடனே காட்சிகள் உடனடியாக மாறத் தொடங்கின. கோத்ரா ரயிலெரிப்புச் சதிக்கு இசுலாமியர்கள்தான் மூலக் காரணம் என்று சொல்லப்பட்டதால் எளிதாக முசாபர் நகர கலவரத்தை யும் நம்பவைத்து, இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்க முடியும் என்பதால் இப்படிப் பேசப்பட்டது. ஆனால் கோத்ரா ரயிலெரிப்பு வழக்கில் இந்து பயங்கரவாதிகளின் சதி இருந்தது அம்பலப்படுத்தப் பட்டதை மக்கள் எளிதாக மறந்திருப் பார்கள் என்ற நினைப்பின் அடிப் படையில் அப்படிச் சொல்லப் பட்டிருக்கலாம். இந்த ஒப்பீடு வந்தவுடன் அப்படி யாரும் திசை திருப்பவேண்டாம் என்று முலாயம் சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். அவர் அப்படிப் பதறியதற்கு இசுலாயர்களை தமது மகனின் ஆட்சியில் குற்றவாளிகளாக்கினால் தமது கட்சியின் இசுலாமியர் வாக்கு வங்கி சிதறிவிடுமே என்ற அச்சத்தினால்தான்.
          ஆனால் இந்துத்துவ சக்திகள் விடவில்லை.. அவர்கள் தமது ஒப்பீட்டை மோடி எதிர் அகிலேஷ் யாதவ் ஆட்சிகளின் ஒப்பீடாக மாற்றியமைத்தார்கள். அகிலேஷ் யாதவ் பதவி யேற்ற ஆறு மாத காலத்திற்குள் 26 கலவரங்கள் நடந்ததாகவும், மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு கலவரங்களே நடை பெறவில்லை என்றும் ஒப்புமைச் செய்து விளக்கம் கொடுத்தார்கள். இசுலாமியர்களின் ரத்தத்தில் கை நனைத்து, பெரும் படுகொலைகளை அரங்கேற்றி ஆட்சியைப் பிடித்த பிறகுதான் கலவரமற்ற பூமியாக குசராத்தை மோடி மாற்றினார் என்பதை அப்பட்டமாக ஊடகங்கள் மறைத்தாலும் புதிய ஒப்பீட்டை அவை ஏற்றுக்கொண்டதுபோல செய்தி களை வெளியிட்டன.
            காங்கிரஸ் ஒருபடி மேலே போய்.. மாநில அரசின் அமைதியைக் காக்க உதவி செய்வதாக அறிவித்தது. மேலும் இப்படி நடக்கும் என்ற உளவுத்துறையின் தகவலை முன்பே மாநில அரசிற்குச் சொல்லிவிட்டோம், ஆனால் அவர்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டனர். எனினும் இன்னும் 11 மாநிலங்களுக்கு இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே எச்சரிக்கை விடுத்தார்.
             இவ்வளவு மோசமாகத் திரிக்கப்பட்ட முசாபர் நகர் கலவரத்தின் பின்னணியினைப் பார்த்தால் திட்டமிட்ட வன்முறைக்கு எப்படி அச்சாரமிட் டிருக்கிறார்கள் என்பது புரியும். சொல்லப்பட்ட முதல் கதைப்படி, முசாபர் நகரின் கவால் கிராமத்தில் 2013 ஆகத்து 24 அன்று ஒரு பெண்ணை சில முசுலீம்கள் சீண்டினார்கள். அதைத் தட்டிக் கேட்ட அந்த பெண்ணின் உடன்பிறந்தவர்களான கவுரவ் சிங், சச்சின் சிங் ஆகியோர் முசுலீம்களால் கொல்லப்பட்டார்கள். சீண்டப்பட்ட பெண்ணும் அவளது உடன் பிறந்தவர்களும் ஜாட் சாதியினர் என்பதால் அச்சாதியினரின் மகா பஞ்சாயத்து உடனே கூடியது. அப்படிக் கூடும்போது கூட்டமாக வந்தவர்கள் மீது மசூதியில் இருந்தவர்கள் செருப்பை வீசி அவமதித்தனர். உடனே கலவரம் வெடித்தது. மசூதியிலிருந்து செருப்பு வீசப்படுவது எப்போதும் சொல்லப்படும் கதை என்பது எந்த உறுத்தலையும் ஊடகங்களுக்கு உருவாக்கவில்லை. எனினும் கதை ஏற்கப்பட்டது.
          ஆனால், உள்ளூர் காங்கிரஸ் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் களத்தில் குதித்து பிரச்சினையின் உண்மைத் தன்மையை வெளியே கொண்டுவந்த உடன் கதையின் மூலத்தையே மாற்றி அமைத் தார்கள் இந்துத்துவச் சக்திகள். இப்போது சொல் லப்படும் இரண்டாவது கதைப்படி, முசாபர் நகரின் கவால் கிராமத்தில் ஒரு தலித் பெண்ணை இசுலாமியர்கள் கிண்டல் செய்தார்கள். அதைத் தட்டிக் கேட்ட தலித்துகளை இசுலாமியர்கள் கொலை செய்தார்கள் என்று இணைய ஊடகம் முதல் எல்லா வட நாட்டு ஊடகங்களிலும் பரப்பினார்கள்.
இப்படி, ஒரே சம்பவத்திற்கு இரண்டு மூலங் களை அவர்கள் கற்பிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? கொல்லப்பட்ட இருவரும் ஜாட் சமூகத் தவர் என்றாலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில்தான் இறந்தனர் என்று காவல்துறை சொன்னது. அதேபோல பழிக்குப் பழியாக ஓர் இசுலாமியர் ஜாட்டுகளால் வெட்டிக் கொல்லப் பட்டார். இதைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் முன்பே இதில் இருக்கும் ஓர் இந்து பயங்கரவாதத் தின் பின்னணியை உணர்ந்த முதல்வர் அகிலேஷ், சிபிஐ விசாரணைக் கோரி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் பிரச்சினையைக் கையாளும் ஆற்றலற்றவர் என்பதைத் தாமே முன்வந்து நிரூபிக்கும் ஆற்றல் பெற்றவர் என்பதைக் கண்டு இந்து சக்திகள் குதூகலித்தன என்பது ஒரு புறம் இருந்தாலும்..
          சொல்லப்பட்ட கதைகளின் பின்னே உள்ள மர்மம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டு மானால், ஒரு பெண் கேலி செய்யப்பட்ட சம்பவம் உண்மைதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், அதை இதுவரை உறுதி செய்ய முடிய வில்லை. கேலி செய்யப்பட்டது தலித் பெண்ணாக இருந்தால் ஜாட்டுகளின் மகா சபை கூடுவதற்கான அவசியம் ஏன் வந்தது? தலித்துகளின் உரிமையைக் காக்கவா? அல்லது கொல்லப்பட்ட தலித் இளைஞர் களுக்கு நீதி கேட்கவா அவர்கள் கூடினார்கள்? 2013, ஆகத்து மாதம் 27ஆம் நாள் தொடங்கிய வெறியாட்டம் செப்டம்பர் மாதம் 17ஆம் நாள்தான் முடிவிற்கு வந்தது. அதற்குள் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு சின்னச் சீண்டலுக்கு இவ்வளவு நாட்கள் கலவரத்தை நடத்த வேண்டும் என்பதற்கு என்ன தேவை இருக்கிறது.
          தமிழகத்தில் வேண்டுமானால் அது பொருத்த மாயிருக்கலாம்! தருமபுரியில் திவ்யாவின் தந்தை சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்தபோது (அது கொலைதான் என்று திவ்யாவே ஒரு பேட்டி யில் சொல்லியிருக்கிறார்) எப்படி சாதி இந்துக்கள் திடீரென ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அந்த மரணத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றி ஒரு வெறி யாட்டத்தையே நடத்தினார்களோ, அப்படித்தான் முசாபர் நகரில் ஜாட்டுகள் திரண்டார்கள். முதலில் கொல்லப்பட்டது ஜாட்டுகள் என்று சொல்லித்தான் கலவரத்தைத் தொடங்கினார்கள். வெளி மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் உள்ள ஜாட்டுகள்கூட அந்த மகா பஞ்சாயத்தில் கலந்து கொண்டார்கள் என்று புலனாய்வு இதழ்கள் எழுதின. கொலை செய்யப்பட்ட சேதி கிடைத்த உடனே எப்படி அவ்வளவு ஜாட்டுகள் கூடினார்கள் என்பது பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்க லாம். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத அந்த வெறியர்கள் கலவரத்தை ஒரு போர்க்கால நிகழ்ச்சி போல பல நகரங்களுக்கு உடனடியாக விரிவு படுத்தினார்கள். கொலைகள் தொடர்ந்தன. முசாபர் நகரச் சீண்டலுக்குப் பதிலடியென்றால் மற்ற பகுதி களுக்கும் அது பரவியதைப் பற்றி எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை. அப்படி யென்றால் இந்த நிகழ்ச்சி திடீரென நடந்ததல்ல என்பது அப்பட்ட மான உண்மை. அது முன்பே நன்கு திட்டமிடப் பட்டு நடத்தப்பட்ட வெறியாட்ட நாடகம்.
         ஆனால் எழும் கேள்வி என்னவென்றால் கேலி செய்யப்பட்ட தலித் பெண்ணின் உடன்பிறந்தவர் களைக் கொலை செய்தது யார்? ஜாட்டுகள் செய் தார்களா அல்லது இசுலாமியர்கள் செய்தார்களா என்று பார்த்தால் நிச்சயம் அதை ஜாட்டுகள் செய்திருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அதற்குக் காரணமான பாஜகவை சேர்ந்த ஜாட் சாதி பயங்கர வாதிகளும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்தான் கலவரத் திற்கான மூளையாகச் செயல்பட்டனர் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஆயினும் இதிலும் தனது வாக்கு வங்கி அரசியலைச் செய்தார் அகிலேஷ். ஜாட்டுகளை மட்டும் கைது செய்தால் அவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள நேரிடும் என்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் சில உள்ளூர் இசுலாமியர்களையும் கைது செய்து தமது சார்பற்றத் தன்மையைக் காப்பாற்றத் துடித்தார். ஆனால் அதெல்லாம் எடுபடவில்லை என்பது ஒருபுறமிருக் கட்டும். ஜாட்டுகள் தமது வன்முறை வெறியாட் டத்தைத் திட்டமிட்டுத் தொடர வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதைப் புரிந்துகொண்டால்தான் அதன் அரசியல் முக்கியத்துவம் விளங்கும்.
          உத்திரப்பிரதேச அரசியலை நன்கு கவனிப்பவர் களுக்கு அங்குள்ள வாக்கு வங்கியை யாரெல்லாம் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். பெரும்பான்மையுள்ள தலித்துகளின் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சியும், காங்சிரசும் பிரித்துக் கொள்கின்றன, அதேபோல இசுலாமியர்களின் வாக்குகளை இக்கட்சிகளோடு சமாஜ்வாடியும் பிரித்துக் கொள்கிறது. பிராமணர்களின் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் பிரித்துக் கொள்கின்றன. யாதவர்களின் வாக்குகளை முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி பிரித்துக் கொள்கிறது. ஆனால் ஜாட்டுகளின் வாக்குகளை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சொல்லப் போனால் ஜாட்டுகளின் கட்டுப்பாட்டில்தான் பாஜக இருக்கிறது. ஆனால் ஜாட்டுகளை வைத்துக்கொண்டு மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்பது பாஜகவிற்கு நன்கு தெரியும். எனவே, உ.பி. மாநிலத்தின் பாஜக அரசியல் கட்டுமானத்தை மாற்றியமைக்க மோடி தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் பணிகளை முடுக்கினார்.
            அதன்படி 2013, சூலை மாதம் உ.பி. மாநிலத்தின் பாஜகவிற்கு தேர்தல் பரப்புரைப் பொறுப்பாளராக மோடியின் நெருங்கிய சகாவான அமித் ஷா நியமிக்கப்பட்டார்.  அவர் அதே மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இருந்த இடத்திற்கு வந்து அங்கே ராமர் கேயில் கட்ட பாஜக உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். உடனே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் அதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து பாஜகவும் சங் பரிவாரங்களும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்று அறிவித்து 2013 ஆகத்து 24ஆம் நாள் ஒரு முன்னோட்டத்தைச் செய்து பார்த்தன. பைசாபாத் மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது பேரணி வெற்றி பெறாமல் பிசுபிசுத்துப் போனது. பெரும் கலவரம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் 400 பேர் மட்டுமே கைதானார்கள் என்பது பெரிய ஏமாற்றமே. எனவே பாஜகவின் பழைய பானை புளித்துப் பொங்கிப் போனதை அக்கட்சியே உணர்ந்துகொண்டதால் புதிய பாணியை அது முன்னெடுக்க வேண்டியக் கட்டாயத்திற்கு உள்ளானது. மோடியின் சகாவுக்கு அது மிகப் பெரிய பின்னடைவு. உபியில் பாஜக காலூன்றினால் தான் மோடியின் பிரதமர் கனவு பலிக்கும். குஜராத் கலவரத்தின்போது அமித் ஷாவின் பங்கு பிரதான மாகப் பேசப்பட்டது. எனவே, அவருக்கு தனது குஜராத் பாணியை கையிலெடுப்பது ஒன்றும் உறுத்தலாக இருக்காது. ஆகத்து 24ஆம் நாள் பிசுபிசுத்த காவியின் வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்த உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் அதே ஆகத்து மாதத்தின் 27ஆம் நாள் முசாபர் நகர் கவால் கிராமக் கலவரமாகும். பாஜகவின் அரசியல் பலத்தைப் பெருக்க ஜாட்டுகளின் காட்டு மிராண்டித்தனமான வன்முறை குணத்தைப் பயன்படுத்திக் கொள்வது, அதாவது, மத அரசியலை கொஞ்சம் ஓரம் தள்ளி வைத்துவிட்டு ஜாதிய அரசியலை முன்னெடுப்பது. அதை ஜாட்டுகளிட மிருந்து தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்துக்களுக்கு எதிராக இசுலாமியர் என்றும், இசுலாமியர்களுக்கு எதிராக தலித்துகள் என்றும் பல கோணங்களில் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க.
          பாஜகவின் இந்தப் புதிய அணுகுமுறை சாதிய அரசியலை ஏற்கெனவே முன்னெடுத்திருந்த காங்கிரசுக்கு மட்டுமல்ல, உ.பி. மாநிலக் கட்சி களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும். ஏனெனில் வெறும் இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கக்கூடிய அளவிற்கு பாஜகவின் அடித் தளம் இப்போது இல்லை. மாறாக, இடை நிலைச் சாதிகளின் அரசியலை அது உள்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி நிற்பதால் அது தனக்குள் பல மாறுதல்களை ஏற்கத் தொடங்கிவிட்டது. அதன் பிரதிநிதிதான் நரேந்திர மோடி என்பது அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
              மேலும், இத்தனைக் காலம் இந்து பயங்கர வாதம் கட்டிக்காத்து வந்த பார்ப்பன ஆதிக்கத்தின் அரசியல் இப்போது முடிவுக்கு வந்தது என்று அர்த்தமல்ல, இடைநிலைச் சாதிகளின் இந்து அரசியலை அது இதுவரை அங்கீகரிக்காமல் இருந்ததுபோல் இனி இருக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டதால்தான். அதுவுமின்றி, பாஜக வின் தலைமையில் இப்போது கவர்ச்சிகரமான பார்ப்பனர்கள் யாரும் இல்லை என்பதை ஒரு பற்றாக்குறையாக அது உணர்ந்து கொண்டதும் ஒரு காரணம். எல்லோருக்கும் வயசாகாதா என்ன! எவ்வளவு காலத்திற்குத்தான் வயதானவர்களையே பார்ப்பனர்கள் முன்னிறுத்திக் கொண்டிருப்பார்கள். சங் பாரிவாரங்களில் முக்கியப் பிரிவான ஆர்.எஸ்.எஸ் இன்றைக்கு இடைநிலைச் சாதி களின் அடிப்படைவாத அமைப்பாக மாறிய பிறகு அதன் பிரதிநிதியாக யார் வரமுடியும்? 61 வயதான இளைஞர் நரேந்திர மோடியைத் தவிர, யார் அதற்குத் தகுதியானவராக இருக்க முடியும்? அதனால்தான் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார்.
                எனவே, உத்திரப்பிரதேசத்தின் முசாபர் நகர் கலவரம் என்பது ஒரு முன்னோட்டம், இடை நிலைச் சாதிகளை இந்து அரசியலுக்குள் ஒருங் கிணைக்கும் ஒரு முன்னோட்டம். அதுவுமின்றி அது தருமபுரியில் ஏற்கெனவே பார்த்த முன்னோட்டம். அதற்குக் காரண கர்த்தாவான பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்த அத்தனை பிற்போக்குச் செயல் பாடுகளுக்கும் தமிழகத்தின் சாதிய அமைப்புகள் மட்டுமல்ல, அந்த அமைப்புகளின் பின்னணியில் இருந்த இந்துத்துவச் சக்திகளும் ஆதரவளித்தன என்பது எதேச்சையானது அல்ல. மரக்காணம் கலவரம் நடப்பதற்கு முன்பு தமிழகம் வந்த அகிலேஷ் யாதவ் தமிழகத்தில் உருவான புதிய பயங்கரவாதச் செயல்திட்டத்தை தனது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நகரத்தில் வெள்ளோட்டம் பார்ப்பார்கள் என்று நினைத்திருக்க மாட்டார். பலர் அவரை அப்போது எச்சரித்தார்கள்; அவர் கேட்கவில்லை. இடைநிலைச் சாதிகளின் பாசத்தில் அதை வாக்குகளாக மாற்றலாம் என்று அவர் போட்டக் கணக்கை இன்றைக்கு பாஜக கையி லெடுத்ததையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒருவேளை அவர் ஆட்சியில் இல்லாமலிருந் திருந்தால் இந்தச் செயல்திட்டத்தை உ.பி.யில் நிறை வேற்றியிருக்கலாம்; ஆட்சியில் இருக்கும்போது அது தேவைப்படாது என்று நம்பியிருக்கலாம். ஆனால் நரேந்திர மோடிக்கு அது தேவை யல்லவா?
         பாஜகவின் பரப்புரைக் குழுவின் தலைவராக முதலில் தெரிந்தெடுக்கப்பட்டவர் பின்பு பெரிய நாடகத்திற்குப் பிறகு பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஒரு மாநிலத்தின் முதல்வரை நாட்டின் பிரதமாக அறிவிக்கும் அளவிற்கு அக் கட்சி தலைவர்களின் பற்றாக்குறையில் இருக்கிறது என்பதைப் பார்த்து வெட்கப்படுவதற்கு முன்பே நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டார் மோடி. அவர் போகின்ற இடங்களிலெல்லாம் குறி வைப்பது யாரை என்று பார்த்தால் நமக்கு முசாபர் நகரின் அச்சம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. 2013, செப்டம்பர் 26 அன்று திருச்சியில் அவர் கூட்டம் போட்டபோது, அவருக்குப் பெரிய கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிருக்கும் அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தன. அவர் வருகையை தேவதூதனின் வருகை போல எதிர் பார்ப்புகளை உருவாக்கின. இணையத் தளங்களில் எழுதும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வேலைக்காரர்கள் அவரை மிகச்சிறந்த நிர்வாகி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
        வியப்பு என்னவென்றால் அவர் எவ்வளவு சிறந்த நிர்வாகி என்பதை யாராலும் தெளிவாக விளக்க முடியாத நிலையிலேயே இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கும் குஜராத் துக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதும்போது தமிழகம் ஏதோ தரம் தாழ்ந்துபோய் இருப்பதாகக் காட்டினார்கள். தமிழகத்தில் 97 சதவிகித கிராமங் களுக்கு மின்சாரம் சென்று ஏறக்குறைய தன்னிறைவை எட்டியிருக்கிற நிலையில், 13 சதவிகித குஜராத் கிராமங்களுக்கு இன்னும் மின்சாரத்தைக் கொண்டு சேர்க்காமலேயே தனது மாநிலம் மின்சார உபரி உள்ள மாநிலமாக மோடி அறிவித்திருப்பதும், தொழில்துறை முன்னேற்றத்தில் தமிழகத்தைவிட பலபடிகள் கீழேயும் இந்திய அளவில் அம் மாநிலம் 14வது இடத்தில் இருப்பதும் அந்த அரை வேக்காடுகளுக்குத் தெரியவில்லை.
       இப்படிப் பொய்களை மூலதனமாக்கி தனது அரசியல் பரப்புரையைத் தொடங்கியுள்ள மோடி, திருச்சியில் பேசும்போது ஜாட்டுகளிடம் பேசுவதைப் போலத்தான் தனது பேச்சினைத் தொடங்கினார். தமிழில் அவர் பேசத் தொடங்கியபோது ‘இளைய சிங்கங்களே’ என்று சிலாகித்தார். தமிழகத்தின் சிங்கங்கள் சாதிக் கலவரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை பரமக்குடி, தருமபுரி, மரக்காணம் உள்ளிட்ட பல பகுதிகள் நமக்குச் சுட்டிக் காட்டக்கூடிய நிலையில் அவர் யாரைக் குறிவைக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இடைநிலைச் சாதி களைத்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
        நாடாளுமன்றத் தேர்தல் கூடிய சீக்கிரமே வரப் போகிறது. கலவரங்களும் வரப்போகிறது என்பதை தமிழகத்தில் 2012 நவம்பரில் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். இப்போது செப்டம்பர் 2013ல், முன்னதாகவே, இரு மாநிலங்களுக்கு, நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் வேடிக்கை என்ன வென்றால்.. தமிழகத்தில் தலித்துகள், தலித் அல்லாத பெண்களைக் கிண்டல் செய்கிறார்கள் அல்லது காதல் செய்கிறார்கள் என்றுதான் பிரச்சினையைத் தொடங்கினார்கள். ஒரு சில இசுலாமிய அமைப்பு களும் அந்தப் பரப்புரைக்குப் பலியாகி தலித்து களைச் சந்தேகப்பட்டார்கள். ஆனால், தமிழகத்தின் அதே நச்சுக் கருத்தை இசுலாமியர்களுக்கு எதிராக முசாபர் நகரில் மூலதனமாக்குவார்கள் என்று இசுலாமியர்கள்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் இப்போது இசுலாமியர்களையும் தலித்துகளைப் போல குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்திருக்கிறது என்பதுதான் சாதி இந்துக்களின் இடைநிலைச் சாதிகளின் அரசியல்.
          நரேந்திர மோடி பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்பதை விவாதமாக்கி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி தலைப்புச் செய்தியாகவே வைத்திருந்த சாதுரியத்தை நாம் மெச்சினாலும், அவர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே வட மாநிலங்களை சாதியால் எரிய வைக்க முடியும் என்றால், அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நடக்கும் என்பதை சுசில்குமார் சிண்டே வந்து விளக்க முடியுமா என்ன?
         எப்படிப் பார்த்தாலும் இடைநிலைச் சாதிகள் என்பது நெல்லிக்காய் மூட்டைதான். அதை இந்து பயங்கரவாதத்தின் மூலம் கட்டிவைக்கலாம் என்பதற்காக மோடியை முன்னிறுத்துகிறார்கள் என்று எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அது சாத்தியமும் அல்ல என்பது உறுதியான உண்மை என்றாலும் தொடரப் போகும் வன்முறைக்கு தலித்துகளும் இசுலாமியர் களும்தான் பலியாவார்கள் என்பதுதான் மோடியின் முன்னிறுத்தல் சுட்டிக் காட்டும் அச்சம்.
          விரிவாக்கப்பட்ட இக்கட்டுரையை அச்சுக்கு அனுப்பும் முன்னர் 30-9-2013 அன்று மீரட் நகரில் மீண்டும் மகா பஞ்சாயத்து கூடியது. கைது செய்யப் பட்ட ஜாட் சமூக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சாம் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததால் கொதித்துப்போன ஜாட்டுகள் காவலர் களைத் தாக்க, மீண்டும் கலவரம் வெடித்தது.  2,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  கலவரம் பரவுவதைத் தொடர்ந்து துணை இராணுவம் ரோந்துப் பணியில் இறங்கியது.
          மகா பஞ்சாயத்திற்கு பிறகு நடந்து கலவரத்தைப் பார்த்து மிரண்டுபோன மாநில காங்கிரஸ் தலைவர் பகுகுணா, “பாஜக உ.பி.யை இரத்தக் களறியாக்க வரும்புகிறது” என்று கருத்துச் சொன்னார்.  முலாயமோ, “மகா பஞ்சாயத்து தனக்கு எதிராகக் கூட்டப்பட்டது” என்று சொன்னார்.  ஆனால் நடுவண் அரசின் இரும்பு-உருக்குத் துறை அமைச்சர் பேணி பிரசாத் வர்மா, “உ.பி.யில் நடக்கும் கலவரத்திற்குக் காரணம் பா.ஜ.க.வும் சமாஜ்வாடி கட்சியும்தான்.  பா.ஜ.க. வின் நடுவண் அரசில் அமர வேண்டும் என முலாயம் விரும்புகிறார். அதனால் அவரும் கலவரத்தைத் தூண்ட துணைபோகிறார்” என்று குற்றம் சாட்டுகிறார். இதில் எது உண்மை என்பதை பதில் சொல்ல காலம் வரவேண்டியதில்லை.  இடை நிலைச் சாதிகளின் இந்து பயங்கரவாத நகர்வைப் புரிந்துகொண்டால் இது எல்லாமே நாடகம் என்பது புரியும். ஆனால் அந்த நாடகத்திற்கான விலை அப்பாவி மக்களின் உயிர்கள்.
0-
       எனவே, சாதி உணர்வும் மத உணர்வும் சொந்த விசயங்கள் என்று நம்மில் பலர் நினைக்கலாம், ஆனால், அவை தங்களது வாக்கு வங்கிக்கான சரக்கு என்பதை நன்கு அறிந்த இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர் நரேந்திர மோடி அப்படி நினைக்க மாட்டார். அவர் பிரதமர் வேட்பாளர் என்ற வகையில் புதிய அவதாரமாக இருக்கலாம்; ஆனால் பயங்கரவாதத்தைப் பொறுத்த வரையில் அவர் ரத்தக் கறை காயாத பழைய ஆள்தான்!
——————————————————————————
தமிழ்மண் அக்டோபர் 2013 இதழிலும் ‘புதிய தரிசனம்’ செப்டம்பர் 15-30 இதழிலும் வெளியான கட்டுரை மேலும் விரிவாக்கப்பட்ட நிலையில் இங்கே வெளியிடப்படுகிறது