குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்

கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த வரலாற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் பங்கு என்ன என்பதைப் பற்றி மிக லாவகமாக மறைத்திருக்கிறது. மறைத்தது ஆதிக்கச் சாதி புத்திதான்.

ஒருவரின் பங்களிப்பை நன்றியோடு நினைவுக்கூர்வது ஒரு நேர்மையுள்ள சமூகத்திற்கு அழகு. அந்த அழகு இந்தியச் சமூகத்திற்கு என்றைக்கும் வாய்த்ததில்லை. சேரிகளில் உழலும் தலித்துகளின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, எந்தவித உறுத்தலும் இன்றி சுரண்டிப் பிழைக்கும் சாதி இந்து புத்திதான் புதிய இந்தியாவை நிர்மாணம் செய்த அம்பேத்கரின்  விசயதிலும் நடந்தது.

இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டப் பிறகு புதிய இந்தியாவிற்கான  அரசமைப்புச் சட்டத்தை சுமார் மூன்று ஆண்டுகள் தனியொரு நபராக நின்று, தனது உடல் பலவீனத்தினையும் பொருட்படுத்தாமல் உருவாக்கினார் புரட்சியாளர் அம்பேத்கர். அவர் சட்டவியலில் மட்டும் மேதைமை வாய்த்தவர் அல்ல, அதைவிடவும் மானுடவியல், சமூகவியல், வரலாற்றியல், மொழியியல், தத்துவவியல், புள்ளியியல். மதவியல் மற்றும்  அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அரசியல் பொருளாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் அவர்தான். ஒரு நாட்டிற்கு அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றால் அரசியல் பொருளாதார மேதமை இல்லாமல் உருவாக்குவது கடினம். அதுவுமின்றி பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மேதையாக அவர் இருந்தக் காரணத்தினால்தான் நவீன இந்தியாவிற்தகான அரசமைப்புச் சட்டத்தினை வடிவமைக்கத் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதை அவர் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தனி வரலாறு.

இந்தியாவில் சமத்துவ சமூதாயம் அமைக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் பெரிதும் விரும்பினார். சோசலிசம் என்பது வன்முறையின் மூலம் அல்லாமல் ஜனநாயகத்தின் மூலமாக அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டை அவர் கொண்டிருந்தார். ஏனெனில் இந்தியாவில் சமூக மாற்றமானது ஐரோப்பாவில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரிசைக் கிரமத்தில் நடைபெறவில்லை தெளிவாக அவர் அறிந்தவர். அதனால் ஒரு மாற்று வடிவத்தில் சோசலிசத்தினை கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பியக் காரணத்தினால், அரசமைப்புச் சட்டத்தில் அதை அடிப்படையாக வைத்தார்.

அரசு சோசலிசத்திற்கு நேரு மட்டும் காரணம் என்று சொல்பவர்கள் அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க நேருவின் பங்களிப்பு என்ன என்பதை அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும், அரசமைப்புச் சட்டத்தில் சமூக சோசலிசத்திற்கான அடிப்படைகளை அம்பேத்கர் வரையறுக்காமல் போய்விட்டிருந்தால் அரசு சோசலிசம் என்பது இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமா என்பதே கேள்விக் குறிதான்.. ஆனாலும் இந்தியாவில் அரசு சோசலிசம் என்பது நிர்மாணிக்கப்பட்டது. அதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள்தான் ஜனவரி 26 1950.

ஆனால் இந்த நாளில் அம்பேத்கர் எப்போதும் நினைவுகூறப்பட மாட்டார். மாறாக யாரெல்லாம் அரச சோசலிசத்தினை குழிதோண்டிப் புதைத்தார்களோ அவர்களெல்லாம் முன்னிருந்தப்படுகிறார்கள். கேடுகெட்ட தரகர்களின், சினிமா கழிசடைகளின், ஆளும் கும்பலின் அடிவருடிகளின் மோசடிகளை மறைத்து சாகசங்களாக முன்னிருத்தும் நாளாகத்தான் ஜனவரி 26 மாற்றப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் இந்து பயங்கரவாதிகளின் கட்சிகள், அவர்களின் ஊதுகுழலாக இருக்கும் பனியா ஊடகங்கள் இந்திய தேசத்தின் தேசப்பற்றினை போற்றுகிறோம் என்று கூசாமல் சொல்லிக் கொண்டு அப்பட்டமாகவே அரசு சோசலிசத்தின் உயிரோட்டத்தினை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். இனி அது மீள்வதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன என்றாலும் சீரிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்களும், சாதி பேதமற்ற சமத்துவ சமூகத்தினை அமைக்க விருப்பம் உள்ளவர்களும், ஒரு சமதர்ம நாட்டை கட்டமைக்க அடித்தளமிட்டவரின் பங்களிப்பை போற்ற வேண்டும். சாதி மனநிலையில் நின்றுக்கொண்டு அம்பேத்கரின் அர்ப்பணிப்பை மறப்பது மன்னிக்க முடியாத துரோகம்.

எனவே அம்பேத்கரின் மாபெரும் பங்களிப்பை, அவர் என்னவிதமான சமூக அமைப்பை அமைக்க விரும்பினாரோ, அதை முன்னெடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 26 குடியரசு நாளை புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அர்ப்பணிப்போம்.

சன்னா/26.01.2013

 

Advertisements

உங்கள் விமர்ச்சனம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s