கூடங்குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு ஏன் ?

அணு ஆபத்தற்ற தமிழகத்திற்கான வழக்கறிஞர்கள்

Advocates for Nuc-danger free TamilNadu

 சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், சென்னையில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், சமுகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளநிலை வழக்கறிஞர்கள் ஆகியோரின்  பங்கேற்றபில் “கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு ஏன் ” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 24.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு தம்புத்தெருவில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. அரங்கில் வழக்கறிஞர் சா.கௌதம சன்னா அவர்களின்  தலைமையில் நடந்தது.

 வழக்கறிஞர் சா.ரஜினிகாந்த் வரவேற்புரையாற்ற, வழக்கறிஞர்கள் வடிவு, தமிழினியன், செய்யாளன், துரைமுருகன், பாரி, குமணராசா, கல்யாணி, இளவரசு, பழனிமுத்து, கான்சியஸ் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகிக்க கூடங்குளம் மக்கள் அணு உலையை ஏன் எதிர்க்கிறார்கள்? என்ற தலைப்பில் சுப. உதயகுமார் அவர்களும், புஷ்பராயன் அவர்களும், கல்பாக்கம் அணு உலையின் பாதிப்புகள் குறித்து மருத்துவர் புகழேந்தி அவர்களும் கருத்துரை வழங்கினர். இந்நகழ்வில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.சங்கரசுப்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் அறிவழகன், பிரசன்னா, வழக்கறிஞர்கள், கே.பாலு, எழில் கரோலின், சம்பத், மைக்கேல், கோ.பாவேந்தன், பா.புகழேந்தி கே.கிருஷ்ணகுமார், த.இராசரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக வழக்கறிஞர் தேவ அருள் பிரகாஷ் நின்றியுரையாற்றினார். கருத்தரங்கின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

:

பெறல்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்

தலைமைச் செயலகம், சென்னை

பொருள் – தமிழகத்தை அணு ஆபத்தில்லா தமிழகமாக மாற்றவும், கூடங்குளம் அணு உலை அமைவதை தடுத்து நிறுத்தக் கோரியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு வழக்கறிஞர்களாகிய நாங்கள் எங்களின் ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டு வருகிறோம்.

தீர்மானங்கள்

1. இரோசிமா, நாகாசாகி, ரஷ்யாவின் செர்னோப்பில், அண்மையில் ஜப்பானின் புகுசிமா உள்ளிட்ட உலகின் பல பாகங்களில் அணு குண்டுகளாலும், அணு உலைகள் வெடிப்பினாலும், அவற்றின் கதிர் வீச்சினாலும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு இக்கருத்தரங்கு தமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது. மேலும் இதே காரணத்திற்காக அவர்களோடு இவ்வுலகில் கொல்லப்பட்ட கோடிக்கணக்கான உயிரினங்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலியை இக்கருத்தரங்கம் செலுத்துகிறது.

2. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், கூடங்குளம் இடிந்த கரையை மையமாகக் கொண்டு அணு ஆபத்தில்லாத உலகைப் படைக்கவும் பாதுகாப்பான தமிழகத்தை வரும் தலைமுறைகளுக்கு வழங்கவும் போராடும் மக்கள் அனைவரும் தமது போராட்டத்தில் வெல்ல இக் கருத்தரங்கம் அவர்களை வாழ்த்துகிறது. மேலும் போராடும் மக்களுக்கு பாதுகாப்பாக சட்ட வழியில் துணை நிற்போம் என இக்கருத்தரங்கம் உறுதியளிக்கிறது.

3. கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக  கட்டப்பட்டு வரும் கூடங்குளம்  அணுமின் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் விருப்பத்திற்கும் அவர்களது பாதுகாப்பிற்கும்  நலனிற்கும் எதிராக உள்ளதால் கூடங்குள அணுமின் திட்டத்தை கைவிடும்படி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்தும் இக்கருத்தரங்கின் வாயிலாக இந்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

4. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, தங்களது தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் அணுக்கதிர் வீச்சின் பாதிப்பற்ற, பாதுகாப்பான வாழ்வை கேட்டு இடிந்த கரையை மையமாகக் கொண்டு போராடும் அனைத்து மக்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்கு முறைகளையும், காவல்துறை அடக்கு முறைகளையும் உடனே நிறுத்தும்படி மைய-மாநில அரசுகளை இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.

5. கூடங்குளத்தில் போராடும் மக்களையும் அவர்களது போராட்டத்தில் உள்ள தார்மீக அறநெறி சார்ந்த கோரிக்கைகளை நேர்மையோடு விவாதிக்காமல் கொச்சைப்படுத்துவதுடன் அம்மக்களின் மீதும், அவர்களின் முன்னணித்  தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்திய மதவெறி பாசிஸ்டுகளையும், அரசியல் கட்சிகளையும் வழக்கறிஞர்களாகிய நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம்.

6. கூடங்குளம் அணுமின் நலையத்தை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதும், அணுமின் உலை எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணித் தலைவர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படவேண்டும் எனவும் இக்கருத்தரங்கின் வாயிலாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

7. கூடங்குளத்தில் குழந்தை குட்டிகளோடு களத்தில் இறங்கி போராடும் பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களையும் கொச்சைப்படுத்தி பேசிவரும் நடுவண் அரசின் அமைச்சர் நராயணசாமி, கூடங்குளம் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். போராடும் மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை பரிசீலிக்காமல் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியைப் போல மக்களைத் திசை திருப்பும்  வகையில் தரமற்றக் கருத்துக்களை கூறிவரும் அமைச்சர் நராயணசாமியை இக்கருத்தரங்கம் வண்மையாக கண்டிக்கிறது.

8. மனித குலத்திற்கு எதிராக உள்ள அணு ஆற்றல் ஆய்வுகள், நிர்மாணங்கள் எவையும் தமிழகத்தில் தொடங்கப்படக்கூடாது. மேலும், அமெரிகாவில் லாங் ஜலாண்டில் செய்யப்பட்டது போல் கூடங்குள அணுமின் நிலையத்தை அனல்மின் நிலையமாக மாற்றி அமைத்து மின் உற்பத்தியை தொடங்கும்படி மைய அரசை  இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.

9. கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள மக்கள் கதிர் வீச்சினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேன்சர் உள்ளிட்ட பலவிதமான ஆட்கொல்லி நோய்களுக்கு ஆளாகி, தலைமுறை ஊனங்களோடு பிறக்கும் குழந்தைகள் என கல்பாக்கத்தின் அணு உலை பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே கூடுதல் அணு உலைகள் அங்கு நிறுவப்படக்கூடாது எனவும் இருக்கின்ற அணு உலைகள் அனல்மின் உலைகளாக மாற்றப்படவேண்டும் எனவும் கோருகின்றோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மைய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

10. மின்னாற்றல் உற்பத்தியை இந்திய அரசமைப்பின் பொதுப் பட்டியலில் வைத்து, மாநல அரசின் உரிமைகளில் மைய அரசு தொடர்ந்து தலையிட்டு வருகிறது. அதன் விளைவால் தமிழக மின் வாரியத்தின் மின்னுற்பத்தி  செயல்பாட்டை தடுத்து நறுத்தி, வாரியம் புதிய மின் உற்பத்தி நிலையத் திட்டங்களை தானே சுயமாக தொடங்காதபடி கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முடக்கி வைத்த மைய அரசு, தமிழக மின் வாரியத்தை மைய அரசிடமிருந்தும், தனியார் முதலாளிகளிடமிருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் முகவராக மட்டுமே மாற்றியதை இக்கருத்தரங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் மாநில அரசே தனது மின்துறையின் மூலம் தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளக்கூடிய உரிமையை முழுமையாகத் தக்க வைக்கும் பொருட்டு மின்னுற்பத்தியை மாநிலப் பட்டியலில் முழுமையாக சேர்க்க அரசமைப்புத் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் இக்கருத்தரங்கு கோருகிறது.

11. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கூடங்குளத்தில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, அணு உலை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என தமிழக தீர்மானம் நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இக்கருத்தரங்கம் மனமாராப் பாராட்டுகிறது.

மேலும் மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன் வைத்து, தமது பிறந்த நாள் பரிசாக கூடங்குளத்தில் போராடும் பெண்களின் கோரிக்கையை ஏற்று அணுமின் நிலையம் இனி எப்போதும் தமிழகத்தில் இல்லை என்ற வாக்குறுதியை அளிக்கும்படி மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களை இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.

வழக்கறிஞர்கள் நிறைவேற்றி இத்தீர்மானங்களைப் பரிசீலித்து அணு ஆபத்திலுருந்து தமிழகத்தையும், தமிழக, இந்திய, உலக நாட்டு மக்களையும் காத்து உதவும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

இவண் / ஒப்பம்/ சா.கௌதம சன்னா

அணு ஆபத்தில்லா தமிழகத்திற்கான வழக்கறிஞர் அமைப்பிற்காக..

Advertisements

உங்கள் விமர்ச்சனம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s