மலேசியப் பயணம்.. 2 விவாதத்திற்குப் பின்….

thf-malaysia-21-01-19கருத்தரங்கின் இடைவேளைக்குப் பிறகு தொடங்கிய கேள்வி பதில் நிகழ்ச்சி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழ் பௌத்தம் குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள். என்னுடைய பதில் விளக்கத்தில் சிலர் கோபப்பட்டதைவிட இதுவரை நாம் நம்பியிருந்த கருத்துக்கள் வெறும் நம்பிக்கை மட்டும்தானா என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. கோபம் குறைந்து தகவல்களைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்குள் உருவானது. அதற்கு இரண்டு காரணங்களை என்னால் அனுமானிக்க முடிந்தது.

எனக்கு அடுத்து கருத்துரையாற்றிய முனைவர். சுபாஷிணி அவர்களின் உரை நாட்டார் சிறு தெய்வங்களின் பரிணாமம் பற்றியது. அதில் அவர் முன்வைத்த குறிப்புகள் ஏறக்குறைய மலேசிய மக்களின் தெய்வங்கள் தொடர்பான கேள்விகளை உருவாக்கிவிட்டது. எனவே பார்வையாளர்கள் வேறு பார்வைக்கு போக வேண்டிய நிர்பந்தம். அது கேள்வி நேரத்தில் பௌத்தம் தொடர்பான ஆர்வத்தை கிளர்த்திவிட்டது.அது முதற்காரணம்.

இரண்டாவது கடல் ஆய்வாளரான .ஒரிசா பாலு, விஞ்ஞானி கண்ணன் மற்றும் இலங்கைத் தமிழரும் டென்மார்க்கில் வசிக்கும் திரு. தரும குலசிங்கம் ஆகியோரின் கேள்விகள். அவர் மூவரும் சிறந்த ஆய்வாளர்கள் என்பதால் அவர்கள் கேட்ட கேள்விகள் பௌத்தத்தின் தேவையை மலேசிய மக்கள் எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அமைந்திருந்தன என்பதுமன்றி, பௌத்தம் என்பது தமிழர்கள் பின்பற்றிய மதம் என்பதும், அவர்கள் மூலம்தான் அது தெற்காசிய நாடுகளுக்குப் பரவியது என்கிற புரிதலின் அடிப்படையில் அமைந்திருந்தன. இவர்களின் கேள்விகள் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிது என்பதால் கேள்வி நேரம் நீள்வது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அது பெரிய ஆர்வத்தை உருவாக்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு வித்திட்டது.

கருத்தரங்கம் முடிந்தப் பின் மாணவர்களும் பொது மக்களும் என்னிடம் தனித்தனியே பேசுவதற்கு ஆர்வம் காட்டினார்கள். அவர்களிடைய இருந்த தயக்கம் உடைந்துபோய் ஒரு நேசம் உருவாகியிருந்தது. புகைப்படங்கள் எடுப்பதும், மின்னஞ்சல் முகவரி வாங்குவதும் என அவர்களின் ஆர்வம் வெளிப்பட்டது. சிலர் இன்னும் நீங்கள் விரிவாக பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இன்னும் சிலர் நீங்கள் மலேசியாவின் பிற இடங்களுக்கும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். காலையில் இருந்த தயக்கம் மாலையில் முற்றிலும் மாறி போயிருந்ததைத் தெளிவாக உணர முடிந்தது. ஏனென்றால் மலேசியத் தமிழர்களின் உண்மையான வரலாற்றுத் தேடலுக்கு எனது பேச்சு ஒருவகையில் ஒத்தாசைப் புரிந்துள்ளது என்பதும். பௌத்தம் தனக்கு அந்நியமான மதம் இல்லை, அதுவும் தமிழர்களின் மதம்தான் என்கிற புரிதல் அவர்களுக்குள் உருவாகத் தொடங்கியதும்தான் காரணம். ஆயினும் பழமைப் பேசும் சைவ ஆர்வலர்கள் வெகுசிலர் அப்படியே ஒதுங்கி நின்று கொண்டார்கள். புதிய தலைமுறை அறிவின் சிகரங்களை நோக்கி பயணிக்க ஆயத்தமானது.

இந்தக் கட்டத்தில் இப்படிப்பட்ட அறிவார்ந்த சூழல் உருவானதற்குக் காரணமானவர்களை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.

thf-malaysia-21-01-20#முனைவர்சுபாஷிணி இவர் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர். பரந்துப்பட்ட வரலாற்று அறிவும், களப்பணி அறிவும் பெற்றவர். உலகம் முழுதும் பயணித்து தமிழ் மரபு குறித்த தரவுகளைச் சேகரித்து தமது அமைப்பின் மூலம் பரப்பி வருபவர். தனிநாயகம் அடிகளுக்குப் பிறகு அந்தப் பணியினை தொடர்ந்து செய்து வருகிறார்.

thf-malaysia-21-01-10#பேராசியர்கண்ணன். இவரும் சர்தேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர். ஜெர்மனியில் பேராசிரியராக பணிப்புரிந்து. பின்பு கொரியாவில் சூழலியல் விஞ்ஞானியாக பணியாற்றி, தற்போது மலேசியாவிலும் சூழலியல் பேராசிரியாக பணியாற்றுகிறார். தமிழ் மற்றும் தமிழர் வரலாறு மீதான தீராத ஆர்வத்தினால் கொரிய தமிழ் தொடர்புகளையும், அதன் மொழி மூலங்களையும் ஆய்ந்து வெளியிட்டவர். தமிழர்களின் பௌத்தம் தொடர்பாக தெற்காசிய அளவில் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இயங்கி வருபவர்.

thf-malaysia-21-01-13#ஓம்ஸ்தியாகராஜன். இவர் தமிழ் மலர் நாளிதழின் அதிபர், ஓம்ஸ் அறவாரியத்தின் நிறுவனர், தொழில் முனைவர், தமிழர்களின் உரிமைக்களத்தில் முன்னிற்கும் முக்கிய மலேசியத் தமிழரின் ஆளுமை.

thf-malaysia-21-01-18#வழக்கறிஞர்சரஸ்வதி, இவர் தமிழ் மலர் நாளிதழின் பொறுப்பாசிரியர், சர்வதேச அம்பேத்கர் மிஷன் மலேசிய கிளையின் செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களின் உரிமைக்காக இரட்டைக் கோபுரத்தின் முன்பு போராட்டத்தை முன்னெடுத்த #இன்ராப் என்கிற தமிழர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர். மலேசிய தமிழர்களின் வரலாறு தொடர்பாக தொடர்ந்து இயங்கி வருபவர்.

thf-malaysia-21-01-9இவர்களைத் தவிர குறிப்பிட வேண்டியவர்கள் தமிழகத்திலிருந்து உலகக் கடல் பரப்பில் பயணித்து தமிழர்களின் வேர்களைத் தேடும் #ஒரிசாபாலு, அம்பேத்கர் இன்டர்நேஷனல் மிஷன் மலேசியப் பிரிவு துணைத்தலைவர் #பெரியசாமி, மலாயா பல்கலையின் மொழியியல் துறையின் விரிவுரையாளர் #மலர்விழி ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.இவர்கள் அனைவரும் கருத்தரங்கின் வெற்றிக்குக் காரணமானவர்கள்.

வெற்றிகரமாக கருத்தரங்கம் முடிந்த இரண்டு நாள்கள் கழிந்து மேற்கண்ட ஆளுமைகளின் முன் முயற்சியால் மலேசிய தமிழர்கள் வரலாற்றை மீட்டெடுக்கும் நோக்கில் ஒரு வரலாற்று மீட்பு அமைப்பும் உருவாக்கப்பட்டது, அதில் கருத்தரங்கில் கலந்துக் கொள்ளாதப் பலர் கருத்தரங்கின் வெற்றியினை கேள்விப்பட்டுக் கலந்துக் கொண்டனர். உருவாக்கப்பட்ட அமைப்பு தொடர்ந்து நாடு முழுதும் மலேசியத் தமிழர்களின் உண்மை வரலாற்றை மீட்டெடுக்கும் செயல்திட்டத்தை முன்மொழிந்து செயல்படுத்த முனைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி, அதில் நிச்சயம் பௌத்தமும் மீட்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

thf-malaysia-21-01-22எனினும், கருத்தரங்கம் முடிந்தப் பின்.. மலேசியத் தமிழர்கள் வாழ்வியலைப் பற்றியும், சூழலைப் பற்றியும் அறியத் தூண்டியது. மேலும் தமிழ் பௌத்தம் தொடர்பாக என்னிடம் விவாதித்த முக்கிய ஆளுமைகளின் கருத்துக்களையும் தொடர்ந்துப் பார்ப்போம்.

-தொடரும்….

Advertisements